×

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எச்சரிக்கை மார்க்ஸ் பற்றி பேசுவதை கவர்னர் நிறுத்த வேண்டும்

சென்னை: ஆளுநரின் கருத்து அறியாமையின் உச்சம். மார்க்ஸ் பற்றி பேசுவதை ஆளுநர் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆயிரமாண்டுகளில் தோன்றிய அறிஞர்களில்  தலைசிறந்த பேரறிவாளர் காரல் மார்க்ஸ் என அறிவுலகம் ஏற்றுக் கொண்டுள்ளது. இதனை அறியாத தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, காரல் மார்க்சின் சிந்தனை இந்தியாவை சிதைத்தது என பேசியிருப்பது அவரது அறியாமையின் உச்சத்தை காட்டுகிறது.

தமிழ்மொழி, மற்றும் சமூகம் குறித்தும், இந்திய ஒன்றியத்தில் இணைந்துள்ள மாநிலங்களில் நிலவி வரும் தனித்துவம் வாய்ந்த சமூக உறவுகள் குறித்தும் அடிப்படை புரிதல் இல்லாதவர் தமிழ்நாட்டின் ஆளுநராக வந்திருப்பது வரலாற்றுத் துயரமாகும். சமூகப் பொருளாதார வாழ்வில் முற்றி வரும் நெருக்கடியில் இருந்து வெளியேற வழி தேடி, உலகம் முழுவதும் காரல் மார்க்ஸ் மறுவாசிப்புக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறார் என்பதை ஆளுநர் கருத்தில் கொள்ள வேண்டும். வர்க்க பேதமில்லாத, சாதி, மத வேற்றுமைகள் இல்லாத, நிகரற்ற மனிதநேய சமூகம் அமைக்க முடியும் என்ற அறிவியல் உண்மையை உலகத்திற்கு அறிவித்த மேதை காரல் மார்க்ஸ் குறித்து விஷமத்தனமாக பேசுவதை ஆளுநர் ரவி இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு எச்சரிக்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : Communist Party of India ,Governor ,Marx , Communist Party of India warns Governor to stop talking about Marx
× RELATED பிளஸ் 2 தேர்வில் சாதனை படைத்துள்ள...